தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ” ஸ்டாலின் போகுமிடமெல்லாம் தமிழக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவை அனைத்துமே பொய்யான குற்றச்சாட்டுகள். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார். விவாதத்திற்கு ஸ்டாலின் தயாரா? முதல்வரும், அமைச்சர்களும் ஊழல் செய்து விட்டதாக பொய்யான புகாரை ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
எங்களது அரசில் எல்லாப் பணிகளும் இ-டெண்டர் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஊழல் பற்றிப் பேச அருகதையில்லாதவர். அ.தி.மு.க அமைச்சர்கள் சிறையில் களி தின்பார்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிக்க எந்த இடத்துக்கு ஸ்டாலின் அழைத்தாலும் நான் வருகிறேன். இந்த சவாலை ஏற்க ஸ்டாலின் தயாரா? எதில், என்ன ஊழல் என்று கேட்டால், நான் பகிரங்கமாக பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். தி.மு.க குடும்ப கட்சி. வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வரமுடியும். அ.தி.மு.க-வில் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம் என்பதற்கு நானே சாட்சி” என்றார்.