இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி நேற்று நள்ளிரவு ஜே.சி.பி இயந்திரம் மூலம் திடீரென இடித்து தரைமட்டமாக்கப்பட்டதும் மேலும் அங்குள்ள இரண்டு நினைவு ஸ்தூபிகளை இடிக்கும் முயற்சி நடந்து வருவதாகவும், அதற்கு மாணவர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்