சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகை சித்ரா அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவரது மரணம் தற்கொலை தான் என்பது உடற்கூராய்வில் உறுதியான நிலையில் அவரது தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது கணவர் ஹேமந்த் ஆகியோரிடம் காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தற்கொலை செய்துகொண்ட நடிகையின் கைபேசியும் தடயவியல் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் திருமணம் நடைபெற்று ஏழு வருடங்களுக்குள் தற்கொலை நிகழ்ந்துள்ளதால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி சித்ராவின் மரணம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெறும். அதன்படி இன்று ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணையைத் துவங்கினார். ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் இந்த விசாரணையில் தற்கொலை செய்துக் கொண்ட நடிகை சித்ராவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரும் விசாரிக்கப்பட உள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சித்ரா வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.