கரோனா பரவல் காரணமாக சிலி நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டு மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாதவர்களுக்கு பல லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிலி நாட்டு அதிபர் செபாஸ்டியன் பினேரா ஒரு பெண்ணுடன் கடற்கரையில் அருகருகே நின்று மாஸ்க் அணியாமல் எடுத்துக் கொண்ட ஒரு செல்ஃபி புகைப்படம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியானது.
எனது வீட்டருகே உள்ள கடற்கரையில் நான் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு நின்ற ஒரு பெண் என்னை அடையாளம் கண்டு என்னுடன் ஒரு செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார். அவரது விருப்பப்படி நாங்கள் இருவரும் ஒரு செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டோம் என இது குறித்து விளக்கமளித்த அதிபர் செபாஸ்டியன் பினேரா தெரிவித்தார்.
இது தொடர்பாக அதிபர் மன்னிப்பு கோரி இருந்த நிலையிலும், விதிமுறைகளைப் பின்பற்றாமல் மாஸ்க் அணியாமல் இருந்த குற்றத்துக்காக அந்நாட்டு சட்டத்தின்படி அதிபர் செபாஸ்டியன் பினேராவுக்கு 3,500 டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 2.7 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.
தென் அமெரிக்க நாடான சிலியில், மே- ஜூன் மாதங்களில் மிக அதிகமாக இருந்த கரோனா தொற்று பரவல் நவம்பர் மாதவாக்கில் குறைய துவங்கியது. ஆனால் இப்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் நோய் பரவலை தடுப்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.