காட்பாடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த 8 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாரபடவேடு பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(65). இவருடைய மனைவி ராணி(60).
நேற்று மாலை ராணி தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்றிருக்கிறார். பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு அங்கிருந்து வீடு திரும்பியிருக்கிறார். அதை கவனித்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த மர்மநபர்கள், பாலாஜி நகர் பகுதியில் யாரும் இல்லாததை அறிந்து, நடந்து சென்றுகொண்டிருந்த ராணி அருகே வந்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி சரடை பறித்து ராணியை கீழே தள்ளி தப்பிச் சென்றனர். தடுமாறி எழுந்திருந்த ராணியால் அவர்களைப் பிடிக்க இயலவில்லை.
தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவத்தால் ராணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதுடன் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து காட்பாடி காவல் நிலையத்தில் ராணி அளித்த புகாரின் அடிப்படையில் காட்பாடி காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.