டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. அதில் ஒரு விவசாயி மரணமடைந்தார், 400 காவலர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக பஞ்சாபி நடிகர் தீப் சிந்து மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரைத் தாக்குதல், கொலை முயற்சி, கலவரத்தை தடுக்கும் ஊழியர் மீது தாக்குதல், பொது இடத்தை சேதப்படுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
200 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு நடந்த அவமதிப்பை அரசு பொறுத்துக்கொள்ளாது. வன்முறையை தூண்டி விட்டவர்களை அரசு சும்மா விடாது. விவசாயிகள் போராட்டத்தை ராகுல் காந்தி தூண்டி விட்டுள்ளார். சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போதும் ராகுல்காந்தி இதைத்தான் செய்தார்” என்றார்.