நடந்துமுடிந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னனி மாநில தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை கைபற்றியது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 51 வார்டுகளை இடது முன்னனி கைபற்றியது. அடுத்ததாக 34 வார்டுகளை கைபற்றி பாரதிய ஜனதா கட்சி இரண்டாம் இடத்தைக் கைபற்றியது. ஆனால் 10 இடங்களை மட்டுமே கைபற்ற முடிந்த காங்கிரஸ் கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இடது முன்னனி 2015 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 43 வார்டுகளை விட கூடுதலாக 8 இடங்களை இந்த தேர்தலில் பெற்றுள்ளது. அதே போல் பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வார்டுகளை விட கூடுதலாக ஒரு வார்டில் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பெரிய இழப்பு காங்கிரஸ் கூட்டணிக்கு தான். ஏனென்றால் கடந்த தேர்தலில் வென்ற வார்டுகளை விட இந்த தேர்தலில் 11 வார்டுகள் குறைவாகவே காங்கிரஸ் கூட்டணியால் வெற்றி பெற முடிந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கோவிட்- 19 தொற்றுக்கு மத்தியில் நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு கேரள உள்ளாட்சி தேர்தல்களில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 70.04 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதே போல் காங்கிரஸ் கட்சியும் ஆளும் இடது முண்ணனியின் நிர்வாகத்தை ஊழல் ஆட்சி என்று குற்றம்சாட்டி மிக தீவிரமாக பிரச்சாரம் செய்திருந்தது. அதிலும் குறிப்பாக இடது முன்னனியின் முதல்வர் பினராயி விஜயன் மீதே ஊழலுக்கான பழியை சுமத்தி பிரச்சாரம் செய்திருந்தது. ஆனால் அது எதுவும் பாரதிய ஜனதா கட்சிக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ சாதகமான பலனைக் கொடுக்கவில்லை.
கடந்த 10 வருடங்களாக இடது முன்னனியின் கையில் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சியை இந்த முறையும் வென்று அதை இடது முன்னனி தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது