தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசாக தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,500/- பணம், ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை முந்திரி ஆகியவை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். மேலும் 2021 ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவங்கும் என்றும் கூறியிருந்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் அண்ணாமலையின் கருத்து சர்ச்சையாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளான் சட்டங்களின் நன்மைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறும்விதமாக தமிழக பாரதிய ஜனதா சார்பில் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது அண்ணாமலை தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டம் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் அண்ணாமலையின் கருத்து அதிமுக வட்டாரங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை தேர்தல் நேரத்தில் ரூபாய் 2,000/- ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிபட்ட அரசியலை பாரதிய ஜனதா விரும்பாது என்று தான் கூறியதாகவும் ஆனால் அதை தவறாக சித்தரித்துள்ளனர் என்றும் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக சில ஊடகங்கள் மக்களை குழப்பும் பெரும் முயற்சியை செய்து வருவதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.