நாமக்கல் மாவட்டம் சந்திரசேகரபுரம் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என கொத்தோடு திமுகவில் இணைத்து மாஜி அமைச்சர் தங்கமணிக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழும் தங்கமணியின் சொந்த மாவட்டமாகும். இந்நிலையில் அவரது சொந்த மாவட்டத்திலேயே அதிமுகவினர் திமுகவுக்கு தாவியிருப்பது முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
தமிழகம் முழுவதும் திமுகவில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகளும், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை வளைக்கும் படலங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள சந்திரசேகரபுரம் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் முத்துசாமி, மற்றும் 5 கவுன்சிலர்கள் ஆகியோர் மாஜி அமைச்சர் தங்கமணி மீது அதிருப்தியில் இருப்பதை உள்ளூர் திமுக நிர்வாகிகள் ஸ்மெல் செய்திருக்கின்றனர். இது குறித்த தகவலை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் எம்.பி. கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கின்றனர். இதையடுத்து அதிமுக சேர்மன், வைஸ் சேர்மன் மற்றும் 5 கவுன்சிலர்களை கொத்தாக திமுகவுக்கு தூக்குவதற்கான பணிகளை கவனித்தார் ராஜேஷ்குமார் எம்.பி.