’’கூடா நட்பு கேடாய் முடியும்’’ என காங்கிரஸோடு தனக்கு இருந்த கூட்டணி உடன்படிக்கையை முன்வைத்து கருணநிதி இப்படி ஒருமுறை பேசினார். இந்த வாதம் இப்போது அச்சு,அசலாக பாஜக_அதிமுக உறவுநிலைக்குப் பொருந்துகிறது. இதுகுறித்து அலசுகிறது இந்தப் பதிவு.
ஜெயலலிதா என்னும் ஆளுமையின் மறைவுக்குப் பின்னர் கேள்விக்குறியானது அதிமுகவின் எதிர்காலம். ஒரே தலைவி என ஜெயலலிதாவைக் கொண்டாடி மகிழ்ந்த அதிமுகவினருக்கு அவருக்குப் பின் யார் என பெரும் குடைச்சல் எழுந்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவரைப் போலவே தன் பாவனையை மாற்றி அரசியல் அரிதாரம் பூசினார். அதுவரை நிழல் உலகில் மட்டுமே இருந்த சசிகலாவும், அவரது படையும் அப்போது முழுதாக மக்கள் மத்தியில் உலாவந்தனர். கட்சியின் மூத்தநிர்வாகிகள் கூட சாஸ்டாங்கமாக விழுந்து சசிகலாவை வணங்கினர். தமிழகத்தின் எதிர்காலத்தைக் காக்க சின்னம்மா அரசியலுக்கு வரவேண்டும் என கைகூப்பி வணங்கினர்.
ஜெயலலிதா காலத்திலேயே அவரால் முதல்வர் பதவியை ஏற்கமுடியாத தருணங்களில் முதல்வராக்கப்பட்டவர் ஓ.பி.எஸ். சசிகலா, டி.டி.வி ஆசியால் அதிமுகவில் உச்சத்துக்குப் போனவர் சசிகலா முதல்வர் நாற்காலிக்கு நெருங்கிவருவதைப் பார்த்ததும் தர்மயுத்தம் தொடங்கினார். ஜெயலலிதா சமாதியில் அவர் நடத்திய தர்மயுத்தம் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. வளர்த்த கிடா மார்பில் பாய்வதைப் போல அவரும் சசிகலா, டிடிவிக்கு எதிர் துருவத்தில் சென்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்_ஈபிஎஸ் இணைந்தனர். ஆனால் இந்த இணைப்பு வெறுமனே கண் துடைப்பு அளவில் இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் மனரீதியாக இணையவில்லை.
இப்படியான சூழலில் அதிமுகவின் சறுக்கலின் போதெல்லாம் கைகொடுத்தது பாஜக. ஜெயலலிதாவின் இறப்பின் போது நேரில்வந்த பிரதமர் மோடி, சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் சொன்னார். ஆசி வழங்குவது போல் இருந்தது அந்த புகைப்படம். ஆனால் பாஜக தரப்பு அவருக்கு அனுசரணையாக இல்லாததன் வெளிப்பாடே, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சிறைவாசம். இது இப்படியிருக்க எடப்பாடி பழனிச்சாமி அரசோ, பாஜக, மத்திய அரசின் உத்தரவுகளையெல்லாம் செயல்படுத்தி தங்கள் விஸ்வாசத்தைக் காட்டத் தொடங்கியது. இதற்கெல்லாம் உச்சமாக போன நாடாளுமன்றத் தேர்தலில் மோடியா? இந்த லேடியா? எனக் கேட்ட ஜெயலலிதாவின் கட்சிக்குள் இருந்துகொண்டே மோடி எங்கள் டாடி என பேசத் துவங்கினர். பாஜகவினரே வெட்கப்படும் அளவுக்கு அதிமுக விஸ்வாசத்தைக் கொட்டியது.
இதனிடையே தலைமை செயலகத்தில் ரெய்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என பாஜக அதிமுகவுக்கு நெருக்கடியைக் கொடுத்து அவர்களைக் கையில் எடுத்தது. அதிமுகவை வளர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஓ.பி.எஸ்_ஈ.பி.எஸ் இருவருமே பாஜக தலைமைக்கு விஸ்வாசத்தைக் காட்டுவதில் முந்திக் கொண்டிருந்தனர். கழகம் என்னும் போர்வையில் இருவரும் இணைந்தாலும் மனதால் இருவரும் இணையவே இல்லை. எடப்பாடி தொகுதியில் தன்னிச்சையாக முதல்வர் தொடங்கிய பிரச்சாரமும், தமிழகத்தின் தலைமகன் என ஓ.பி.எஸ் தனித்து தன்னை முன்னிலைப்படுத்தும் விளம்பரமும் இதற்குச் சாட்சி. பரஸ்பரம் இருவரும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் படத்தைத் தவிர்த்தும், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் படத்தைத் தவிர்த்தும் விளம்பரம் செய்கின்றனர்.
இத்தனை இடர்கள் இருந்தாலும் அதிமுக பிரச்சார களத்தில் முந்தியே ஓடுகிறது. அமைச்சர்கள் தங்கள் தொகுதிக்குள் பம்பரமாக சுற்றுகின்றனர். அதிமுக தங்களுக்குள் பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி தங்கள் முதல்வர் வேட்பாளர் என உறுதியாக அறிவித்துவிட்டு களத்தில் குதித்துள்ளது. தேசிய அளவில் வலுவாக இருந்தாலும் தமிழகத்தில் அதிமுகவின் முதுகிலேயே சவாரி செய்யும் நிலையில் இருக்கும் பாஜகவோ கூடவே இருந்து அதிமுகவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது. முதல்வர் வேட்பாளரை பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும். தேர்தலுக்குப் பின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என வித, விதமாக தானும் குழம்பி மக்களையும் குழப்புகிறது பாஜக.
கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்து களம் கண்டது. அதிமுகவோ மாநிலக்கட்சி. அது பிரதமர் வேட்பாளராக யாரையும் அறிவிக்கவில்லை. தேர்தலுக்குப் பின் யாரை ஆதரிக்கப்போகிறோம் என்பதையும் தெளிவுபடுத்தவில்லை. ஆனாலும் அன்புமணி ராமதாஸ், பொன்.ராதாகிருஷ்ணன் தவிர்த்து 37 தொகுதிகளை வாரிச் சுருட்டியது அதிமுக. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் இருந்தது. அதற்குக் காரணம் ஜெயலலிதா என்னும் ஆளுமை. இப்போதைய சூழல் அப்படி அல்ல என்பதை பாஜக உணரவில்லை. தமிழகத்தில் பாஜகவுக்கு இன்று பல நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கட்சிக்கான தலைவர்களாக இருக்கிறார்களே தவிர, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வெகுமக்கள் ஏற்றுக்கொண்ட ஆளுமை இல்லை. அரசியலுக்கு வருவதாகச் சொன்ன ரஜினியும் பின்வாங்கிவிட்டார்.
இப்படியான சூழல் நெருக்கடியில் ஏற்கனவே பிரிந்து, இணைந்து, இப்போது கூட்டத்தில் இணைந்தும், மனதால் பிரிந்தும் இருக்கும் அதிமுக நிர்வாகிகள் மட்டத்தில் தேர்தல் ஒட்டத்தில் இது பெரும் தடையாக இருக்கும். ஏற்கனவே மாநில உரிமைகளை அதிமுக பாஜகவிடம் அடகுவைத்துவிட்டதாக பொதுவெளியில் குற்றச்சாட்டு எழும்நிலையில் மாநில முதல்வரை அறிவிக்கும் உரிமையைக் கூட அடகுவைத்துவிட்டதாக எதிர்ப்புக்குரல் எழும்பும். ஒருகட்டத்தில் இப்படியே போனால் கூடா நட்பு கேடாய் முடியும் என்னும் சொல்லாடல் பாஜக, அதிமுக கூட்டணிக்கும் பொருந்திப்போகும் வாய்ப்பு இருக்கிறது. ரத்தத்தின் ரத்தங்களும், காவித்தலைவர்களும் உணர்வார்களா?