அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 9 ஜனவரி 2021 சனிக்கிழமை அன்று சென்னை வானகரத்தில் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றிதழோடும், கரோனா தடுப்புக்காக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முககவசம் அணிந்து வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலை ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நடத்த வேண்டும் என அதிமுக, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினர். இதில் அதிமுக சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசும் போது, மே மாதத்தில் கோடை காலம் ஆரம்பித்து விடும் என்பதால் சட்டசபை தேர்தலை ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நடத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்ததாக கூறினார்