சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும், சிறந்த புற்றுநோய் நிபுணருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவால் இன்று (ஜன.19) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5-மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது. 1927-ம் ஆண்டு மார்ச் 11 அன்று டாக்டர் சாந்தா பிறந்தார். விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா. சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் டாக்டர் பட்டமும், 1955-ல் முதுகலை மருத்துவ பட்டமும் பெற்றார். அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் டாக்டராக தனது பணியை துவங்கினார். 12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குருவாக போற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, உலகத் தரம்வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு பெரும் பாடுபட்டார்.
அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் தங்கி சேவை செய்துவந்தார். அவரது மருத்துவ சேவையை பாராட்டி பல உயரிய விருதுகள் அளிக்கப்பட்டன. மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். விருதின் மூலம் கிடைத்த தொகையையும் புற்றுநோய் மருத்துவத்துக்காக செலவிட்டவர் டாக்டர் சாந்தா.
டாக்டர் சாந்தா மறைவிற்கு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “புற்றுநோய் சிகிச்சை அளிக்க பாடுபட்ட டாக்டர் சாந்தா எல்லோரது நினைவிலும் இருப்பார். அடையாறு புற்றுநோய் நிறுவனம் ஏழை, எளியோர்க்கு சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. சாந்தா மறைவு கவலையளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “டாக்டர் சாந்தா அவர்களை இழந்து வாடும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த டாக்டர் சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் தன்னலமற்ற சேவையினை கவுரவிக்கும் விதமாகவும், அன்னாரின் இறுதி சடங்குகளின் போது, போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.