எல்லா பெண்களுமே நாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வரத்தான் விரும்புகிறார்கள். விரும்பினால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அவர்கள் கையாளவேண்டும். அந்த வாழ்க்கைமுறை உணவு, உடல், மனம் சார்ந்ததாகும்.
பெண்கள் பெரும்பாலும் தங்கள் புற அழகைப்பற்றித் தான் கவலை கொள்கிறார்களாம். நாற்பது வயதில் புறஅழகை மட்டுமே வைத்துக்கொண்டு நாயகிகள் போல் கட்டுக்கோப்பான உடலுடன் வலம்வர முடியாது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுதான் எப்போதும் மிக முக்கியம். நாற்பது வயதை கடக்கும்போது உடலில் சக்தி குறைந்து, தசைகள் தளரத் தொடங்கும் என்பதை முப்பது வயதை கடக்கும்போதே அனைவரும் மனதில்கொள்ளவேண்டும். அப்போதிலிருந்தே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தினால், நாற்பது வயதில் உடல்நல பிரச்சினை எதுவும் அறவே தோன்றாது.

“நாற்பது வயது பருவம் என்பது பெண்களை பொறுத்தவரையில் ரொம்பவே முக்கியமானது தான். அப்போது அவர்கள் பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருப்பார்கள். அதனால் அவர்களின் உடல்வலு குறைந்திருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அந்த காலகட்டத்தில் கால்சியம் மற்றும் புரதசத்து குறைபாடுகள் தோன்றும் என்பதால், அதை ஈடுகட்டும் விதத்திலான உணவுகளை தவறாது உண்ணவேண்டும்.
நீங்கள் 30 வயதை கடக்கும்போதே வீட்டில் சமையல் எண்ணெய்யின் தேவையை பாதியாக குறைத்திடவேண்டும். அசைவ விரும்பிகள் வாரத்தில் ஒருநாள் அசைவம், ஆறு நாள் சைவம் என்ற உணவுமுறையை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

பெண்கள் என்றாலே எப்போதும் ஏதாவது பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதையே நினைத்து கொண்டு வருந்தாமல். பொருளாதார நெருக்கடி, குடும்ப நெருக்கடி போன்றவைகள் இருந்தாலும் அதை நினைத்து மனதை நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொள்ளக்கூடாது. மற்றவர்களை குறை சொல்வதை அறவே தவிர்ப்பதும், எதிர்காலத்தை நினைத்து கவலைகொள்ளாமல் இருப்பதும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதற்கான வழிமுறையாகும்” என்று மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள்