துபாயில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வாத விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் திருச்சியை சேர்ந்த நான்கு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என எட்டுபேர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களின் லக்கேஜ்கள், உடைகளில் சோதனையிடப்பட்டது. அதில் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் சந்தே கம் தீராத சுங்க அதிகாரிகள் அந்த எட்டுபேரையும் விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று வயிற்றில் ஸ்கேன் செய்தனர். அவர்கள் வயிற்றிற்குள் மாத்திரை வடிவில் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த எட்டுபேரையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அவர்களுக்கு இனிமா கொடுக்கப்பட்டு, வயிற்றில் இருந்த தங்க மாத்திரைகளை வெளியே எடுத்தனர். மொத்தம் 4.15 எடை கொண்ட 161 தங்க மாத்திரைகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு 2 கோடியே 17 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச தங்க கடத்தல் கும்பலிடம் குருவிகளாக வேலை செய்வதாக கூறப்படும் அந்த எட்டுபேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த கும்பல் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யா நடித்த அயன் சினிமாவில் வயிற்றுக்குள் வைத்து போதை பொருட்களை கடத்தும் காட்சி வரும். அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.