தனது முதல் பயணத்தின்போதே மூழ்கி போன மிகப்பெரிய ஆடம்பரக் கப்பல் தான் டைட்டானிக் இந்த கப்பலில் பயணம் செய்த பல அனுபவங்களை தத்ரூபமாக காட்டியிருக்கும் பாலிவுட் சூப்பர் ஹிட் படம்தான் ‘டைட்டானிக்’
படம் முழுக்க கப்பலை மட்டுமே காட்டியிருந்தால் அதில் விறுவிறுப்பாக இருக்காது என்பதால், அதில் பயணிக்கும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகளும் கதைக் களமாக இருந்தன. கதை என்றால் காதல் இருக்க வேண்டும் அல்லவா? அழகான காதல் ஜோடியின் ஆழ்ந்த காதலை யதார்த்தமாக பதிவு செய்திருந்தார் இயக்குனர்.
இந்த டைட்டானிக் கதைக்காக மிகவும் சிரமம் எடுத்து காட்சிகளை அமைத்த இயக்குனர் கேமரூன், படத்தை 1997-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி திரையிட திட்டமிட்டிருந்தார். ஆனால் தயாரிப்புக்கு பின்னர் தொழில்நுட்ப பணி காரணமாக திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் டைட்டானிக் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்றே அனைவரும் எண்ணினர்.
ஆனாலும் மக்கள் மத்தியில் இதுபோன்ற சர்ச்சைகளையெல்லாம் கடந்து வெற்றிகரமாக 1997ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி டைட்டானிக் வெளியிடப்பட்டது. வெளியானவுடன் எதிர்பாராத வசூலை அள்ளிக் குவித்ததுடன் 11 விருதுகளையும் வென்று உலக சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த டைட்டானிக் வெளியாகி இன்றோடு 23 ஆண்டுகள் ஆகிறது.
லியானார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள டைட்டானிக் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவையும் பெற்று என்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து நிலைத்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.காதலை உலக அளவில் கொண்டுபோய் நிறுத்திய டைட்டானிக் போல, நம் தமிழகத்தில் காதலை வீடுகளுக்குள் ஆதரிக்க வைத்த ’காதலுக்கு மரியாதை’ திரைப்படமும் இதேகாலத்தில் தான் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.