டில்லியில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் அமித்ஷா பேசுகையில், “டில்லியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவர சமயத்திலும், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போதும் டெல்லி போலீசார் மிகவும் திறம்பட செயல்பட்டனர். அடுத்த வருடத்திற்குள் காவல்நிலையங்களின் செயல்திறன் மேம்படவேண்டும். அதற்காக, டில்லி போலீஸ் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒவ்வொரு காவல்நிலையங்களுக்கும் ஐந்து இலக்குகள் நிர்ணயிக்க வேண்டும்.
பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், போலி பண நோட்டுகள் பதுக்கல் போன்ற பல சவால்களை டில்லி காவல்துறை எதிர்கொள்ளவேண்டும். ஜனாதிபதி மாளிகை, பிரதமர் வீடு, வெளிநாட்டு துாதரங்கள், பிரதான அமைப்புகளின் தலைமையகங்கள், அறிவியல் மையங்கள் என பல முக்கிய இடங்கள், டில்லி போலீசாரின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. எனவே, உங்களுக்கு அதிக கடமைகள் உள்ளன. குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் டில்லி முழுதும் 15 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்” என்றார்.