தமிழகத்தில் கரோனா தொற்று அச்சுறுத்தல் இன்னும் விலகாத நிலையில் பள்ளிக்கூடங்கள் கூட திறக்கப்படவில்லை. ஆனால் 100 சதவிகித இருக்கைகளுடன் மாஸ்டருக்கு அனுமதிக்கப்பட்டு தியேட்டர்கள் திருவிழா கோலம் காண இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கரோனா தொற்றின் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுவிட்டது. சினிமா தியேட்டர்களும் இதன் எதிரொலியாக மூடப்பட்டது. தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு சினிமா தியேட்டர் அனுமதிக்கப்பட்டுவிட்டாலும் திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி எனவும் தமிழக அரசு சொல்லியிருந்தது. அதன் காரணமாகவே பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகியிருக்க வேண்டிய மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல் பரவிய நிலையில் விஜய் ரசிகர்கள் ஷாக் ஆகினர். இந்நிலையில் அதை தயாரிப்பு தரப்பு மறுக்கவே நிம்மதி பெருமூச்சு விட்டனர் விஜய் ரசிகர்கள். இப்படியான சூழலில்தான், வரும் 13 ஆம் தேதி மாஸ்டர் ரிலீஸ் ஆவது உறுதியானது. இதனைத் தொடர்ந்து மாஸ்டருக்கு நூறு சதவிகித இருக்கையிலும் ரசிகர்களை அனுமதிக்கக் கேட்டு நடிகர் விஜய் தரப்பில் இருந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கையை நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜய் இப்படி ஒரு கோரிக்கையை வைத்ததால் தான் அரசுக்கு அதை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் வந்தது. அதேநேரம் நடிகர் விஜய் தன் ரசிகர்களின் நலனைப் பற்றி யோசிக்க வேண்டாமா? தங்களின் மனம் கவர்ந்த நாயகனின் படம் ரிலீஸ் ஆகிறது என தியேட்டரில் கூட்டம் குவியும். சமூகஇடைவெளி காணாமல் போகும். இன்னும்கூட கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்காத சூழலில் இது தேவையற்ற கரோனா பரவலுக்கு வழிவகுத்துவிடாதா? ஆனால் ஏன் விஜய் இதையெல்லாம் யோசிக்கவில்லை.

முதல்வர், துணை முதல்வர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அரசியல் கட்சியினர் பங்கேற்கும்ம் கூட்டம் நடக்கிறதே…அது தொய்வின்றி தானே செல்கிறது எனச் சொல்லலாம். ஆனால் அவர்கள் அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர். விஜய் அப்படி அல்ல. ரசிகர்களின் மனதில் அண்ணனாக, தாய்மார்களின் மனதில் பிள்ளையாக இருக்கிறார். மாஸ்டர் பட ரிலீஸ் தியேட்டர்களில் கூட்டம் குவிந்தால் அதுவேகூட கரோனா தொற்றுக்கு வழிவகுத்துவிடும். இதையெல்லாம் யோசித்தால் தன் ரசிகர்களின் நலனைவிடவும், விஜய்க்கு மாஸ்டர் திரைப்பட கலெக்சன் முக்கியம் போல் தெரிகிறது. கல்விக்கூடங்களே திறக்காத நிலையில் மாஸ்டருக்காக 100 சதவிகித இருக்கைகளை நிரப்புவதை என்னவென்று சொல்ல?