தன்னிடம் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க தனியாக துறை உருவாக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு பாராட்டி நினைவு பரிசும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஸ்டாலின் அதற்குரிய ரசீதுகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் 95 சதவீத மனுக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
மத்திய அரசை தட்டிக்கேட்கும் அரசாக திமுக ஆட்சி கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்த ஸ்டாலின், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.