கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன.
சில பள்ளிகள் வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை அனுப்பி படிக்க வைக்கின்றனர். தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை ஒலிபரப்பி வருகிறது. இந்த நிலையில் வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் திறக்கப்படுகின்றன. 1 முதல் 9-ம் வகுப்பு வரை 50 சதவீதம் பாடங்களும், 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாடங்களையும் குறைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கான இந்த கல்வி ஆண்டின் 10 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்திட்டங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும். விரைவில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.