மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே விவசாயிகள் போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது மத்திய அரசின் வேளாண் சட்டத் சட்டங்களுக்கு எதிராகவும் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் குறித்து ஏற்கனவே விசாரணை நடந்து வருகின்றன. இந்த நிலையில் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு கூறுகையில், “விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை எனப் புரிந்துகொள்கிறோம். இருப்பினும் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு கிடைக்கும் என்பதால் அதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இந்த மனுக்கள் அனைத்தையும் வரும் 11-ம் தேதி மொத்தமாக விசாரிக்கிறோம். வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்” எனத் தெரிவித்தனர்