மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் சுமார் 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரிலும் அவர்கள் நடத்திய போராட்டத்தில் அதிகமானோர் கலந்து கொண்டனர். மேலும் சில விவசாயிகள் அதில் மரணமடையவும் செய்தனர். இந்த நிலையில் போராட்டம் நடத்துபவர்களால் போக்குவரத்து இடையூறு போன்றவை ஏற்படுவதாகவும், போராட்டகாரர்களை அங்கிருந்து மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அனைத்து வழக்குகளையும் ஜனவரி 11ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று நடந்த விசாரணையில் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை வேளாண் திருத்தச் சட்டம் எந்த வகையில் சிறந்தது என்று ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை.

அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த வழக்கின் தொடர் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் வாதங்கள் முடிந்தபிறகு வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இனி விவசாயிகள் போராட்ட களத்தில் இருந்து கலைந்து செல்வார்கள் என கருதப்படுகிறது.