கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னை ஐஐடி வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சென்னை ஐஐடியில் கடந்த இரண்டு வாரங்களில் 66 மாணவர்கள் மற்றும் 5 ஊழியர்கள் என 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் தங்களது விடுதிகளில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டது. அதில் புதிதாக 33 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை சென்னை ஐஐடியில் உள்ள அனைத்து துறைகள் மற்றும் நூலகம் ஆகியவற்றை தற்காலிகமாக மூட ஐஐடி நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பணியாற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாகவும், தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில சுகாதாரத்துறை சென்னை ஐஐடியுடன் இணைந்து பணியாற்றிவருவதாகவும், மாநில சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மாநில சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் விஜய பாஸ்கர் ஆகியோர் நேரடியாக சென்னை ஐஐடியை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.