மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் அவர் தனது உரையில், “கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே பட்ஜெட் தயாரிக்கப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொருளாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஏழைகள் நலவாழ்வு நிதி உதவி திட்டத்தை பிரதமர் தொடங்கினார்.
பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ஊரடங்கை அமுல்படுத்தாமல் இருந்திருந்தால், கொரோனாவால் மிகப்பெரிய சேதத்தை சந்திக்க நேர்ந்திருக்கும். உலகில், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி. மத்திய அரசு விவசாயிகள் நலனில் அரசு உறுதிபூண்டுள்ளது. விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை தொடரும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.1.72 லட்சம் கோடி மதிப்பிற்கு விவசாய பொருட்கள் கொள்முதல் செய்யப்படும். அரசின் தானிய கொள்முதல் மூலம் ஒராண்டில் கூடுதலாக ஒன்றரை கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்றார். மேலும் மதுரை முதல் கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் எனவும். கன்னியாகுமரி முதல் கேரளாவின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் நவீன சாலை அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.