“யார் இந்த நடிகை கங்கனா, அவர் என் வீட்டிற்கு வந்ததில்லை, என் வாழ்க்கையை பார்த்ததில்லை, ஆனால் நான் 100 ரூபாய் கொடுத்தால் போராட்டத்திற்கு வருவேன் என அவர் எப்படி சொல்லலாம்?” – மொஹிந்தர் கவுர்
ட்விட்டர் பலருக்கு வாய்ப்புகளைத் தரும் இடம் என்றால் சிலருக்குப் பிரச்னைகளைத் தருமிடம். கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனில் தொடங்கி அரசியல்வாதி சஷி தரூர் வரை பலருக்கும் அவர்களது ட்வீட்டால் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன.
அதிலும் பாலிவுட் நடிகர்களின் அடிப்படை தேவையாகவே மாறிவிட்டது ட்விட்டர். நடிகர்கள் அவர்களின் கருத்துக்களை, நிலைப்பாடுகளை முன்வைப்பதில் தொடங்கி ரசிகர்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பது வரை எல்லாவற்றிற்கும் பயன்படுகிறது ட்விட்டர். ஒரு நடிகருக்கான ஆதரவோ, வெறுப்போ நேரடியாக ரசிகர்கள் வெளியிடுவதற்கான வடிகாலாகவும் ட்விட்டர் பயன்படுகிறது. அவ்வகையில் எப்போதும் ட்விட்டரில் செம பிஸியாக இருப்பவர் நடிகை கங்கனா ரனாவத்.
‘குயின்’ திரைப்படத்திற்காக முதல் முறை தேசிய விருது வாங்கி புகழின் உச்சியைத் தொட்டவர். அடுத்த ஆண்டும் ‘தனு வெட்ஸ் மனு’ படத்திற்காக மீண்டும் தேசிய விருது வாங்கி பாலிவுட்டின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாகி விட்டார். ‘குயின் ஆப் பாலிவுட்’ என ரசிகர்கள் கொடுத்த அன்பு அடைமொழிக்கு சொந்தக்காரர். எப்போதும் சர்ச்சைகளின் குயின் ஆகவும் இருப்பவர்.
பாலிவுட்டின் வாரிசுகளின் ராஜ்ஜியம் குறித்து, மீ டூ இயக்கத்தை குறித்து அவரது பல கருத்துக்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் அவரது அரசியல் கருத்துக்கள் எப்போதும் சர்ச்சை ரகம் தான். சுஷாந்த் வழக்கில் பல நடிகர் நடிகைகளின் மீது நேரடியாக குற்றம் சுமத்தியது, ஹ்ரித்திக் ரோஷன் சர்ச்சை என ஏற்கெனவே பல பிரச்னைகளில் சிக்கியிருக்கும் கங்கனாவுக்கு இப்போது ட்விட்டரில் அவர் பதிவிட்ட டீவீட்டினால் இன்னொரு பிரச்னை.
தலைநகரில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை பற்றிய ட்விட்டர் கருத்தால் பெரும் எதிர்ப்புகளை சம்பாதித்திருக்கிறார் கங்கனா.
பஞ்சாப் மாநில விவசாயிகள் நாட்டின் தலைநகரில், அரசுக்கு எதிராக சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதைப் பற்றி ட்வீட் ஒன்றை எழுதிய கங்கனா, “ஷாஹீன் பாக் போராட்டத்தில் பங்கெடுத்த அதே மூதாட்டிதான் இவர். இவரைத்தான் டைம் பத்திரிகை இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக குறிப்பிட்டு பாராட்டியிருந்தது. இப்போது விவசாயிகள் போராட்டத்தில் இருக்கிறார். இவர் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள 100 ரூபாய் கொடுங்கள் போதும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த ட்வீட் காரணமாக நெட்டிசன்ஸ் கங்கனாவை வறுத்தெடுக்கிறார்கள். தில்ஜந்த் தோசாந்த், ஹிமான்ஷு குரானா, பஞ்சாபி பாடகர்கள் கன்வர் க்ரேவால், பரமீஷ் வர்மா உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து தன் டீவீட்டை நீக்கிவிட்டார் கங்கனா. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹக்கம் சிங் களமிறங்கியிருக்கிறார். அதே ட்விட்டரில் 7 நாட்களுக்குள் கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டுமென கங்கனாவுக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் ஹக்கம் சிங்.
அந்த நோட்டிஸில் ‘தனது ட்வீட்டின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செய்திருக்கிறார். ஒரு சீனியர் சிட்டிசனைக் காயப்படுத்தியிருக்கிறார். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை பெண்களையும் கங்கனா அவமானப்படுத்தியிருக்கிறார். இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த பல விவாசயிகளின் குடும்பங்களையும் இந்த ட்வீட் பாதித்திருக்கிறது. எனவே அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஹக்கம் சிங்.
மேலும், டைம் பத்திரிகை பாராட்டிய மூதாட்டியின் பெயர் பில்கிஸ் பானோ, கங்கனா பகிர்ந்த புகைப்படத்தில் இருப்பவர் பெயர் மொஹிந்தர் கவுர். இருவரும் வெவ்வேறு ஆட்கள் எனவும் தன் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். ஷாஹீன் பாக் போராட்டத்தில் பங்கெடுத்த பில்கிஸ் பானோவும் ஒரு விவசாய மகள்தான். ஆனால், அந்த மூதாட்டியை போராட்டத்தில் பங்கெடுக்க அனுமதியாமல் டெல்லி காவல்துறையினர் தடுப்பு காவலில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த கமென்ட்டில் கங்கனா தன் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பற்றி மூதாட்டி மொஹிந்தர் கவுர் தி ட்ரிபியூன் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில், “யார் இந்த நடிகை, அவர் என் வீட்டிற்கு வந்ததில்லை, என் வாழ்க்கையை பார்த்ததில்லை, ஆனால் நான் 100 ரூபாய் கொடுத்தால் போராட்டத்திற்கு வருவேன் என அவர் எப்படி சொல்லலாம். எங்களுக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் இருக்கிறது, என் நிலைத்து பணியாளர்களுக்கு குவிண்டாலுக்கு 500 ரூபாய் நான் சம்பளம் கொடுக்கிறேன். விவசாயம் செய்வதென்பது மிகவும் கடினமான விஷயம். ஒரு விவசாயியாக நான் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களோடு கைகோர்க்கிறேன். இதெல்லாம் தெரியாமல் அந்த நடிகை இப்படி பேசியது மிகவும் வருத்தமாக இருக்கிறது” என கூறியிருக்கிறார்.
மும்பையில் விதியை மீறி கட்டியதாக கங்கனா ரனாவத்தின் அலுவலகம் மும்பையில் மகாராஷ்டிரா அரசால் இடிக்கப்பட்டது. நீதிமன்ற தற்காலிக தடை உத்தரவின் பேரில் கட்டடத்தை இடிப்பதை பாதியில் கைவிட்டது மகாராஷ்டிரா அரசு. அப்போதிருந்தே மகாராஷ்டிராவின் சிவ சேனா அரசிற்கும், காங்கிரஸுக்கு எதிராகவும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் கங்கனா. அவர் விரைவில் பா.ஜ.க-வில் சேரப்போகிறார் என தகவல்கள் வெளியாகின்றன. அதிகாரபூர்வமாக அவர் இன்னும் கட்சியில் இணையவில்லை என்றபோதும் அவரது கருத்துக்கள் எப்போதும் மத்திய பாஜக அரசிற்கு ஆதரவு அளிக்கும் விதமாகவே இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கங்கனா போன்று பல்லாயிரம் பேரால் பின்தொடரப்படும் நடிகர்கள் கூடுதல் கவனத்தோடு செயல்படவேண்டியது அவசியம். அவர்களின் கருத்துக்கள் ஏற்படுத்தும் விளைவுகள் பெரியது. ஒருவரின் அரசியல் சார்பு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால் அந்த அரசியல் தனிமனிதர்களின் சுயமரியாதையை சீண்டும் வகையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.