எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு இன்று விவசாயிகளை தவறாக வழிநடத்துபவர்கள் அவர்கள் ஆட்சி காலத்தில் இந்த விவசாய சீர்திருத்தங்களை ஆதரித்தனர். ஆனால் அவர்கள் ஆட்சியில் இந்த விவசாய சீர்திருத்தங்கள் குறித்த ஒரு தீர்க்கமான முடிவை அவர்களால் எடுக்க முடியவில்லை. இன்று நாடு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடியை எடுத்து வைக்கும் போது அவர்கள் விவசாயிகளை தவறாக வழி நடத்துகின்றனர், என காங்கிரஸ் கட்சியின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறாமல் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் சாடினார்
குஜராத் மாநிலம் கச் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விவசாய சீர்திருத்தங்கள் என்பது விவசாய அமைப்புகள் மட்டுமல்ல ஏன் எதிர்கட்சிகளும் கூட பல ஆண்டுகளாக வைத்துக் கொண்டிருந்த ஒரு கோரிக்கை தான். இந்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக தன்னை அர்பணித்துக் கொண்டுள்ளது, மேலும் அவர்களின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்வதில் உறுதியாக உள்ளோம் என பிரதமர் தெரிவித்தார்.
போராடும் விவசாயிகளை குழப்பமடைய செய்வதற்காக ஒரு சதி புது தில்லியைச் சுற்றி சுழன்றுக் கொண்டிருக்கிறது. இந்த புதிய விவசாய சீர்திருத்தங்களால் விவசாயிகளின் விவசாய நிலம் வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுமோ என விவசாயிகள் பேரச்சத்தில் உள்ளனர். பால் பண்ணையில் இருந்து பால் வாங்குவதற்காக அந்த பண்ணை உரிமையாளருக்கும் பால் வியாபாரிக்கும் ஒரு ஒப்பந்தம் போடப்படுகிறது. இதனால் அந்த வியாபாரி அந்த பண்ணையில் உள்ள பாலோடு சேர்த்து கால்நடைகளையும் அபகரிக்கவா செய்கிறார் என பிரதமர் தனது உரையில் வினவினார்.
குஜராத்தில் விவசாய பொருட்கள் மற்றும் பால் பொருட்களின் வர்த்தகம் செழிப்பாக உள்ளது. இதற்கான காரணம் இவற்றில் அரசின் ’ஈடுபாடு’ குறைவாக இருப்பதே என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
மத்திய அரசால் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்களை கைவிட வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் புது தில்லியின் எல்லைகளில் 15 நாட்களுக்கும் மேலாக முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள போதிலும் விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் நிலையாக உள்ளதால் பிரச்சனை முடிவுக்கு வராமல் போராட்டம் நீடித்து வருகிறது.