கடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே (84). பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல் அமைதியாக இருந்த அன்னா ஹசாரே விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அன்னா ஹசாரே கூறுகையில், “விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி கடந்த நான்கு ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளேன்.
ஆனால் விவசாயிகள் விவகாரத்தில் அரசு சரியான முடிவு எடுக்கவில்லை. கடந்த மூன்று மாதங்களில் பிரதமருக்கும், வேளாண் துறை அமைச்சருக்கும் ஐந்து முறை கடிதம் எழுதி உள்ளேன். அதுகுறித்து அரசு விவாதிக்க மட்டுமே செய்கிறது. ஆனால் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. எனவே நாளை (ஜனவரி 30) காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க இருக்கிறேன். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எனது சொந்த ஊரான அகமதுநகரில் இந்த போராட்டத்தை தொடங்குகிறேன்” என அறிவித்துள்ளார். மேலும், தனது ஆதரவாளர்கள், அவர்கள் இருக்கும் இடத்திலேயே போராட்டத்தை தொடங்குமாறும் அன்னாஹசாரே கேட்டுக்கொண்டுள்ளார்.