திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விக்னேஷ் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய வயது 38. இவருடைய மகன் ஹரி கிருஷ்ணன்(9) நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் விளையாடுவதற்காக சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் ஹரிகிருஷ்ணன் வீட்டுக்கு வராததால் சண்முகசுந்தரம் தனது உறவினருடன் சேர்ந்து மகனைத் தேடி உள்ளார். ஆனால் அவருடைய மகன் கிடைக்கவில்லை.
உடனே இதுபற்றி அவர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவனைத் தேடி வந்துள்ளனர் .இந்த நிலையில் காட்டூர் மஞ்சத்திடல் குளத்தில் சிறுவனின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது அந்த சிறுவன் நீரில் மூழ்கி பலியானது தெரிய வந்துள்ளது. மேலும் குளத்தில் கிடந்த உடல் காணாமல் போன சிறுவன் தானா என்று உறுதி படுத்துவதற்காக ஹரி கிருஷ்ணனின் பெற்றோரை வரவழைத்தனர். சிறுவனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுததுடன் அது அவருடைய மகன்தான் என்று உறுதிசெய்துள்ளனர்.இதனை தொடர்ந்து சிறுவனின் உடலை மீட்க தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நீண்ட நேரமாகியும் தீயணைப்பு வீரர்கள் வரவில்லை அதனால் திருவெரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையிலான போலீசார் குளத்தில் இறங்கி அந்த சிறுவனின் உடலை மீட்டு வெளியே எடுத்து உள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹரிகிருஷ்ணன் குளத்திற்கு சென்றது என்? குளத்தில் எதற்காக இறங்கினான்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.