மேற்கு தாம்பரம் குளக்கரை 2-வது தெருவைச் சேர்ந்தவர் தான் கவிதா.இவரது மகன் மவுனிக். கக்கன் தெருவை சேர்ந்த தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுவன் மவுனிக் நேற்று மாலை அம்பாள் நகரில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு விளையாட சென்றுள்ளான். ஆனால் பூங்கா கதவு பூட்டி இருந்ததால் அதன் அருகில் இருந்த ரேஷன் கடையில் நுழைவாயிலில் உடைந்து இருந்த இரும்பு கதவின் வழியே நுழைந்து பூங்கா சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் அணிந்திருந்த சட்டையின் காலர் பகுதி சுற்றுச்சுவரில் இருந்த இரும்பு கிரில் கம்பியில் சிக்கி உள்ளது. அது அவனது கழுத்தை இறுக்கி உள்ளது. இதில் மூச்சுத் திணறி சிறுவன் உயிருக்கு போராடியுள்ளார். இந்த நிலையில் சிறுவனை காணாமல் தேடி அலைந்த உறவினர்கள் பூங்காவின் க்ரில் கம்பியில் தொங்கி கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து சிறுவனை மீட்டு பழைய பெருங்களத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். இங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விளையாடச் சென்ற பள்ளி மாணவன் இரும்புக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.