வாட்ஸ் அப் உள்ளிட்ட ஆப்களில் தனி உரிமை தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதால் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புதிய ஆப் கண்டுபிடித்து செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த ஆப்கள் துருக்கி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் உருவாக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. துருக்கி நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள செயலியை பயங்கரவாதிகள் அதிக அளவில் உபயோகித்து வருகின்றனர். இணைய இணைப்புகள் மெதுவாக இருந்தாலும் சிறப்பாக இயங்கும் வகையில் அந்த ஆப்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றை 2ஜி இணைய சேவையிலும் உபயோகிக்க முடியும். 2019 ஆகஸ்டில் ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் அங்கு, இணைய சேவைகள் முடக்கப்பட்டன. தற்போது 2ஜி சேவைகள் வழங்கப்பட்டு விட்டன. அந்த சமயத்தில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு புதிய செயலிகளுக்கு, பயங்கரவாதிகள் மாறியுள்ளது தெரியவந்துள்ளது. காஷ்மீரில், பயங்கரவாத அமைப்பிற்கு ஆள்சேர்க்கும் பணிகளை அந்த செயலிகள் வாயிலாக செயல்படுத்தி வருவதால், அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.