மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரிசா மாநிலம் கட்டாக் பகுதியில் 1897-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி பிறந்தார்.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முடித்த நேதாஜி அதன் பின்பு பல்வேறு பணிகளை வகித்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இருந்தார். இந்திய தேசியப் படையை உருவாக்கினார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வெல்வதற்கு முடிவு செய்து பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் இறப்பு இப்போது வரை மர்மமாகவே உள்ளது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நேதாஜியின் படை அளப்பரிய பணிகளை செய்தது.
நேதாஜி என்று அழைக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுக்களில் அச்சடித்து அவரை கெளரவிக்க வேண்டும் என உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசிலிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.