சென்னையில் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்று ராயபுரம். கடந்த 5 முறையாக இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கிறது அதிமுக. அந்த வெற்றியை சொந்தமாக்கியவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். அமைச்சராக இருந்ததோடு மட்டுமல்லாது, மைக் கிடைக்கும் போதெல்லாம் ஸ்டாலினையும் வறுத்தெடுத்தார் ஜெயக்குமார். இதனாலேயே, ஜெயக்குமாரை ஜெயிக்க விட்டுறாதீங்க என ஸ்பெசல் இத்தரவு போட்டிருக்கிறார் ஸ்டாலின். இப்போது ராயபுரம் தொகுதி எப்படி இருக்கிறது?
ராயபுரத்தில் இதுவரை காங்கிரஸ் 2 முறையும், திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் ஜெயித்திருக்கிறது. இதில் 2001ல் இருந்தே தொகுதியை தக்கவைத்து வருகிறார் ஜெயகுமார். அதேநேரம் ராயபுரம், வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் வருகிறது. இங்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, திமுகவே அதிக வாக்குவாங்கியது. திமுக சார்பில் இந்த முறை ஐ ட்ரீம் மூர்த்தி போட்டியிடுகிறார். இவர் ஐ ட்ரீம் என்னும் தியேட்டரையும் கல்மண்டபம் பகுதியில் நடத்திவருகிறார். ரியல் எஸ்டேட் புள்ளியாகவும் இருக்கிறார்.

ஐ ட்ரீம் மூர்த்தி உதயநிதி ஸ்டாலினின் அதி தீவிர விசிறி. தர்பார் வசூலை விட மிஸ்கின் இயக்கி, உதயநிதி நடித்த சைக்கோ படம் அதிக வசூல் செய்ததாக சொல்லி உதயநிதியையே வெட்கத்தில் முகம் சிவக்க வைத்தவர் தான் இந்த ஐ ட்ரீம் மூர்த்தி. ஜெயக்குமாருக்கு இணையாக தொகுதிக்குள் பணத்தை வாரி இறைக்கிறார். 15 வருடங்களாக அமைச்சராக இருக்கிறார் ஜெயக்குமார். ஆனாலும் ராயபுரத்தில் கடலரிப்பு, ராயபுரம் ரயில் நிலையத்தை முனைய ரயில் நிலையமாக மாற்றுவது, மீன்களை பதப்படுத்த ஜஸ் தயாரிப்பு நிறுவனம் அமைக்கக்கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் மீனவர்களுக்கு இருக்கிறது.
இத்தனை குறைகள் இருந்தும் தொகுதிக்குள் ஜெயக்குமாருக்கு பெரிய செல்வாக்கு இருக்கிறது. உள்ளூரில் அனைத்து நல்லது, கெட்டதுக்கும் வந்து நிற்கிறார். 15 வருடம் அமைச்சராக இருந்தாலும் தொகுதிக்குள் பந்தா இல்லாமல் அனைவரையும் அன்பாக அழைத்துப் பழகுகிறார். இடையில் ஒரு பெண் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியது மட்டுமே மைனஸாக இருக்கிறது.
தொகுதிக்குள் மீனவர்களுக்கு அடுத்து அதிகப்படியாக முஸ்லீம் வாக்குகள் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் ஜெயக்குமாருக்கு முஸ்லீம் வாக்குகள் எதிராக இருக்கிறது. இருந்தும், தொகுதிக்குள் பணத்தை வாரி இறைத்தேனும் ஜெயக்குமார் வந்துவிடுவார் என்பதே நிலவரமாக உள்ளது.