நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினி, ஸ்ரீராகவேந்திரா கல்வி சங்க செயலாளராக உள்ளார். இவர் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் என்னும் பெயரில் பள்ளி நடத்திவருகிறார். இந்த கட்டிடம் வெங்கடேஸ்வரராவ், பூரணச்சந்திரராவ் ஆகியோருக்கு சொந்தமானது. இதில் வாடகை தொடர்பில் இவர்களுக்குள் பிரச்னை இருந்துவந்தது.
இதுதொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. அப்போது வாடகைப்பாக்கி 1.99 கோடி எனவும் வழக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2017ல் பள்ளிக்கேட்டை பூட்டியும் பிரச்னை ஆனது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் பிரச்னை தீராத நிலையில் 2020 ஏப்ரலில் கட்டிடத்தை காலி செய்வதாக ஸ்ரீராகவேந்திரா கல்விசங்கம் தெரிவித்தது.
இந்த சூழலில் கொரோனா வந்துவிட்டதால் கூடுதலாக ஓர் ஆண்டு அவகாசம் கேட்டு லதா ரஜினிகாந்த் தரப்பில் இந்த வழக்கில் கூடுதலாக ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மாத வாடகையாக டிடிஎஸ் உள்பட 8 லட்சம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. காலிசெய்யும் கால அளவை இந்தக் கல்வியாண்டு முடியும்வரை நீட்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் இருந்தது. நீதிபதியோ ஏப்ரலுக்குள் கட்டாயம் காலி செய்ய வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும். அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இந்த இடத்தில் பள்ளி இயங்குவதாகச் சொல்லி சேர்க்கக் கூடாது எனவும் கண்டித்துள்ளது.