ராகுல்காந்தி கடந்த சில வாரங்களாகவே தமிழகம், கேரளத்தில் முகாமிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதில் இப்போது தமிழின் பிரபல யூடியூப் சேனலோடு சேர்ந்து அவர் தயிர் வெங்காயம் செய்து இருக்கும் வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தேசம் முழுவதும் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருகிறது. தமிழகத்திலும் 1967 வரை ஆட்சிக்கட்டிலில் இருந்த காங்கிரஸ் இப்போது மிகவும் பலவீனமடைந்து உள்ளது. அகில இந்திய அளவில் கேரளத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி இன்னும் அதே வீரியத்தோடு உள்ளது. இப்படியான சூழலில் தான் தமிழகம், கேரளத்தில் வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்குள் காங்கிரஸ் கட்சியை இந்த மாநிலங்களில் இன்னும் பலப்படுத்தும் முனைப்பில் இருக்கிறார் ராகுல் காந்தி.
அகில இந்தியத் தலைவர் பொறுப்பில் இருந்த ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளுக்குப் பின்பு அந்த பதவியை ராஜினாமா செய்தார். அண்மையில் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில், மர்ச் மாதத்தில் புதிய தலைவரை நியமிப்பது எனவும், அதற்கான அதிகாரத்தை முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடமே வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தான், ராகுல்காந்தி தமிழகம், கேரளத்தில் காங்கிரஸை வலுப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த வாரத்தில் எளிய மக்களோடு சேர்ந்து அவர் உணவு அருந்துவது, நலம் விசாரிப்பது தொடர்பான காட்சிகள் வைரலானது. இந்நிலையில் இப்போது இன்னொரு வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது. அதில், ராகுல் காந்தி ஜோதிமணி எம்.பியுடன் சேர்ந்து வில்லேஜ் குக்கிங் சேனல் என்னும் யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் பங்கெடுத்து இருக்கிறார். அதில் எளிய கிராமத்து நபர்களோடு சேர்ந்து சமைப்பதோடு மட்டுமல்லாது ராகுலே உப்பு சேர்ந்து தயிர் வெங்காயமும் செய்கிறார். காளான் பிரியாணி செய்து அவர்களோடு சேர்ந்து ராகுல் காந்தியும் சாப்பிடுகிறார்.
ஏழைத்தாயின் மகன் என பிரதமர் நரேந்திரமோடியை முன்னெடுக்கின்றனர். அதற்கு மாற்றாக ராகுல் காந்தியும் இப்போது இப்படியாக ஓடத்துவங்கியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் பணியைத் துவங்கிவிட்டன. இந்நிலையில் ராகுல் காந்தியும் இந்த ஓட்டத்தில் இணைந்துள்ளார். ராகுலின் இந்த முயற்சிகள் ஜெயிக்குமா? மக்கள் மனதில் இடம் கிடைக்குமா என்பதும் போக, போகத் தான் தெரியும்.
இப்போதைய சூழலில் கட்சி பாகுபாடு இன்றி ராகுலின் பிரியாணி வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.