மதுரை விஸ்வநாதபுரத்தில் இயங்கி வரும் மூன்றாம் பாலினத்தவருக்கான அமைப்பான (ட்ரான்ஜெண்டர் ரிசோர்ஸ் சென்டர்) முன்றாம் பாலினத்தவருக்கான இணைய இதழை நவம்பர் 1 ஆம் தேதி ”ட்ரான்ஸ் நியூஸ்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ளடக்கத்தை கொண்டு வெளிவரும் இந்த இணைய இதழ் மாதம் இருமுறை வெளிவருகிறது. மூன்றாம் பாலினத்தவருக்கான அழகுகலை குறிப்புகள், பொதுவான சமையல் குறிப்புகள், கட்டுரைகள், கதைகள், நூல் விமர்சனம், தொடர் கட்டுரை, மற்றும் கவிதை ஆகிய உள்ளடக்கங்கள் இந்த இதழ்களில் இடம்பெறுகிறது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த மூன்று பேர் இந்த இதழில் செய்தியாளர்களாக பணியாற்றுகின்றனர். மேலும் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் சில பெண்களும் இந்த இதழுக்காக உள்ளடக்கங்கள் மற்றும் புகைப்படங்களை பங்களிப்பு செய்கின்றனர். மூன்றாம் பாலினத்தவர்கள் உற்பத்திசெய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் அவர்களுக்கான வேலைவாய்ப்பு செய்திகளை வழங்கும் ஒரு தளமாகவும் இந்த இணைய இதழ் பக்கம் செயல்படுகிறது. மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சாதனையாளர்கள் குறித்தான கட்டுரைகளும் இந்த இதழில் வெளியிடப்படுகிறது.
மூன்றாம் பாலினத்தவர் குறித்தான இந்தியாவின் முதல் இணைய இதழாக இதை பெருமையோடு குறிப்பிடும் இந்த இதழின் ஆசிரியர் பிரியாபாபு இந்த இதழுக்கான வரவேற்பு வியக்கவைக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கிறார். ட்ரான்ஸ் நியூஸ் என்ற இந்த இணைய இதழ் விரைவில் ஹிந்தி மொழியிலும் வெளிவர உள்ளது.
மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான தகவல்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரிச்சனைகள் தொடர்பான புத்தகங்கள், மூன்றாம் பாலினத்தர் தொடர்பாக செய்திதாள்களின் வெளிவந்துள்ள செய்தி கட்டுரைகள், மற்றும் மூன்றாம் பாலினத்தவர் தொடர்பாக வெள்வந்துள்ள நீதிமன்ற தீர்ப்புகள் ஆகிய விவரங்களுடன் டிரான்ஜெண்டர் ரிசோர்ஸ் செண்டர் என்ற இந்த அமைப்பு கடந்த வருடம் ஒரு நூலகத்தையும் நிறுவி உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள நூல்கள் மூன்றாம் பாலினத்தவர் தொடர்பாக ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்த இதழை https://transnews.in/ என்ற இணைய முகவரியில் வாசிக்கலாம்