கடற்கரை மற்றும் சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் அனுமதி அளித்திருந்தார்.
இதற்கிடையே, பிரிட்டனிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரோடு பயணித்தவர்களின் விவரங்களை கணக்கெடுத்தபோது, புதுச்சேரியை சேர்ந்த 30 வயது பெண்மணியும் அந்த விமானத்தில், பாதிக்கப்பட்டவருக்கு பக்கத்து இருக்கையிலேயே அமர்ந்து பயணித்தது தெரியவந்தது. எனவே அவர் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், கிரண்பேடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அதில், தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், அங்கிருந்து பலர் புதுச்சேரிக்கு வர வாய்ப்பிருப்பதாகவும், அதனால் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்தால் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் ரத்தான நிலையில் பலரது கவனமும் புதுச்சேரி நோக்கி திரும்பி இருந்தது. இந்நிலையில் புதுவையில் முதல்வர், ஆளுநர் ஆகியோர் மாறுபட்டு கருத்து சொல்லி இருப்பதால் குழப்பத்தில் இருக்கின்றனர் கொண்டாட்டத்துக்கு டிக்கெட் போட்டவர்கள்!