மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மம்தாவின் அமைச்சரவை ஆட்டம் கண்டுள்ளது. மம்தா பானர்ஜி அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை மந்திரியாக இருந்த சுவேந்து அதிகாரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்துவிட்டார். அதைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த லக்ஷ்மி ரத்தன் சுக்லா திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
ஆனால் அவர் வேறு கட்சியில் இணையவில்லை. இந்த நிலையில் வனத்துறை அமைச்சராக இருந்த ராஜீவ் பானர்ஜி தனது அமைச்சர் பதவியை கடந்த வாரம் ராஜிநாமா செய்தார். இந்த நிலையில் இன்று தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜிநாமா செய்து மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். அதேசமயம் தான் இன்னும் கட்சி உறுப்பினராக இருப்பதாகவும். எதிர்வரும் நாட்களில் தனது முடிவை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்தடுத்து நடக்கும் ராஜிநாமா நிகழ்வுகள் மம்தா பானர்ஜியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.