தமிழக அரசு பொங்கலுக்கு சிறப்புப்பரிசை வழங்கி வருகிறது. முந்தைய ஆண்டுகளில் பொங்கலுக்கு பரிசுத்தொகையாக 1000 ரூபாயாக மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது பொங்கல் பரிசுத்தொகையாக திடீரென 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில் குடும்ப அட்டைக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் நிலையில், அதை குடும்ப அட்டைக்கு 5000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்புப் பரிசு இன்றுமுதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல்.மாவட்டம் கோம்பையான்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்துவைத்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டிருந்தபோது குடிமகன் ஒருவர் அரசின் பொங்கல் பரிசான 2500 ரூபாய் இன்னும் கிடைக்கவில்லை என்றார். அதைக் கேட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மைக்கிலேயே, “இவருக்கு கொடுக்கும் காசு வேற எங்கையும் போகாது. டாஸ்மாக் மூலம் அரசுக்குத்தான் திரும்ப வரும். வேட்டி, சேலை, கரும்பு போன்ற பொருட்களை ஒன்றும் செய்ய முடியாது, அது அவங்க மனைவிக்கு, அந்த அம்மாவுக்கு போய்விடும்” என்றார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சைக் கேட்டு அங்கு கூடி நின்றவர்கள் கைத்தட்டி சிரித்தனர். அமைச்சரின் பேச்சால் பலமான சிரிப்பலை எழுந்தது.