நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என முக்கிய பொறுப்பில் இருக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சீனா உளவு பார்க்கும் படலத்தில் இறங்கியுள்ளதாகவும். அதற்கான பொறுப்பை சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளாதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கிடையே சேவ் தெம் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களின் தகவல் பரைமாற்ற தொடர்புகளை உளவு பார்க்க சீன அரசு ஒரு நிறுவனத்தை ஏற்பாடு செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, தனி நபர் உரிமை ஆகியவற்றுக்கு எதிரான செயலாகும்.
இந்தியாவை உளவு பார்க்கும் சீனாவால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் தகவல்கள் திருடப்படுவது கவலை அளிக்கிறது. இது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அதில், மனுதாரர் இங்கு முறையிடுவதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது நிதியமைச்சகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும். எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விஷால் திவாரி அந்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.