ஹைதராபாத் அருகில் உள்ள துண்டிகல் இந்திய விமான படை அகாடமியில் நடைபெற்ற பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங் மேற்கு பகுதியில் உள்ள நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பல தீங்குகளை செய்து வருகிறது. ”நான்கு போர்களில் தோற்ற பிறகும் மறைமுகமாக தீவிரவாதிகள் மூலம் நம்மிடம் தொடர்ந்து போர் செய்து வருகின்றனர். அவர்களின் முயற்சிகளை தக்க நேரத்தில் விழிப்புடன் முறையடித்து வரும் நமது பாதுகாப்பு வீரர்களை பாராட்டுகிறேன் என அவர் கூறினார்.
லடாக் எல்லையில் நடைபெற்று வரும் இந்திய -சீன பிரச்சனையை குறிப்பிட்டு பேசிய ராஜ்நாத் சிங், கொரோனா தொற்று காலத்தில் லடாக் எல்லையில் சீனப் படையினர் செய்து வரும் செயல் அவர்களின் நோக்கத்தை காட்டுகிறது என்றார். ”மேற்கு எல்லை பகுதியில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். கோவிட் காலத்தில் சீனத்தின் முயற்சிகள் அவர்களது நோக்கத்தை காட்டுகிறது. நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் நாம் அவர்களுக்கு காட்டி விட்டோம்”, என்றார் ராஜ்நாத் சிங்.
அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வேண்டும் என்பதே நமது நிலைபாடு. போர் நமக்கு வேண்டாம், அமைதி தான் வேண்டும். ஆனால் இந்தியாவின் இறையான்மையில் ஒரு போதும் சமரசம் செய்துக் கொள்ள மாட்டோம். எந்த சூழலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம், என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.