பெங்களூரில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் உள் நாட்டு தயாரிப்பான தேஜஸ் எம்.கே-1ஏ போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அடுத்ததாக ரஷ்யாவிடம் இருந்து 21 மிக்-29 மற்றும் 12 சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு தீர்மானம் எடுத்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்துள்ள எப்-15இஎக்ஸ் என்ற அதிநவீன போர் விமானம் குறித்த தகவல்களை இந்திய விமானப்படை அந்த நிறுவனத்திடம் கேட்டிருந்தது. இந்நிலையில் இந்த போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்கலாம் என போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி அங்குர் கனக்லேகர் கூறுகையில், “விமானங்கள் குறித்து இந்தியாவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இனி நேரடியாக பேசமுடியும். அடுத்த வாரம் பெங்களூரில் நடைபெற உள்ள விமான கண்காட்சியில் இதுபற்றி கூடுதல் ஆலோசனை நடத்த வாய்பு உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட எப்-15இஎக்ஸ் போர் விமானங்கள் எல்லாவிதமான வானிலைகளிலும், இரவும், பகலும் சிறப்புடன் செயல்பட கூடியவை. இது இந்திய விமானப்படைக்கு மிகப்பெரிய அளவில் உதவும்” என்றார்.