குஜராத் மாநிலத்தில் பாஜக எம்.பி கட்சியை விட்டு நீங்கியதோடு, தனது பதவியையும் ராஜினாமா செய்வதாக சொல்லியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் பரூச் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு ஜெயித்தவர் மன்சுக் வசாவா. 63 வயதாகும் இவர் இதே தொகுதியில் கடந்த 6 முறையாக வெற்றிபெற்றுவருகிறார். இந்நிலையில் இவர் திடீரென தனது பாஜக உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். நர்மதா மாவட்டத்தின் 121 கிராமங்களை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கும் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவிப்பால் அதிருப்தி அடைந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
இதுகுறித்து மன்சுக் வசாவா எம்.பி, குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘’நான் செய்யும் தவறுக்காக நான் சார்ந்திருக்கும் கட்சியின் மதிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கட்சியை விட்டு விலகுகிறேன். என் பதவியையும் வரும் நாடாளுமன்றக் கூட்டத் ஹொடரின் போது அவைத்தலைவரை சந்தித்து என் எம்.பி பதவியையும் ராஜினாமா செய்வேன். என் தவறுகளால் கட்சி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவே கட்சியிலிருந்து விலகுகிறேன்.’என அதில் கூறப்பட்டுள்ளது.