தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில் அவர் பேசிய வார்த்தைகள் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு அ.ம.மு.க பொதுச்செயலர் டி.டி.வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்துள்ள கருத்தில், “பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி. நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.