தேர்தல் நெருங்கிவருவதால் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்துவிட்டன. மக்கள் சந்திப்பு, கிராம சபை கூட்டம் என மக்களை கவர்ந்து வருகின்றன அரசியல் கட்சிகள்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “நான் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் எம்.எல்.ஏ-வாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவன் தான். அண்ணா மறைவுக்கு பிறகு, கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார். முதல்வரை மக்கள் நேரடியாக தேர்வு செய்ய மாட்டார்கள். பெண்களை வணங்கும் தமிழகத்தில், உதயநிதி பெண்ணை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். அவருக்கு நாவடக்கம் தேவை. அ.தி.மு.க-வில் உழைப்பிற்கு மரியாதை கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சி. சாதாரண கிளை செயலாளராக இருந்து உழைப்பால் இந்த உயரத்தை அடைந்திருக்கிறேன்” என்றார்.