மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளான் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தலைமையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்றும் அது இருப்பதாக நாம் கற்பனைதான் செய்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி பெரும் முதலாளிகளின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருந்க்கிறார். அவருக்கு எதிராக போர்கொடி தூக்கக்கூடியவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தப்படுகிறார்கள்- அது விவசாயிகளாக அல்லது தொழிலாளர்களாக ஏன் மோகன் பாகவத்தாக (ஆர்எஸ்எஸ் தலைவர்) இருந்தாலும் கூட அது தான் கதி, என்றார்.
வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் அந்த மூன்று சட்டங்களும் ரத்துசெய்யப்படும் வரை தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லப் போவதில்லை. மத்திய அரசு பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தலைமையில் புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் 144 தடை உத்தரவு அமலில் இருந்த காரணத்தால் அவர்கள் பேரணியாக செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. தடையை மீறி செல்ல முயன்ற பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.