உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் செளரி செளரா நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், ”நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்கு முக்கியமானது. இந்தியாவை சுயசார்பு நாடாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆறு ஆண்டுகளாக விவசாயிகளை சுய சார்புடையவர்களாக மாற்றும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெருந்தொற்று மற்றும் பொதுமுடக்க காலத்திலும் விவசாயத் துறை சரிவடையாமல் இருந்ததற்கு அந்த நடவடிக்கைகள்தான் காரணம்.
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையே செய்யும், பாதிப்பை ஏற்படுத்தாது. விவசாயிகளுக்கு ஆதரவாக பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் வேளாண் மண்டிகள் உருவாக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் அதிகமான மண்டிகள் தேசிய அளவில் வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் ஒற்றுமைக்கு நாம் முன்னுரிமை அளிக்க நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுடனும் நாடு முன்னோக்கி செல்ல வேண்டும்” என்றார்.