நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் நாகர்கோவில் சந்திப்பு (கோட்டார்) ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் பயணிக்கும் போது 5 கிமீ தொலைவில் உள்ள சிறிய எச்ஜி-1 (HG-1) பிரிவு ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தின் 2019-20ம் ஆண்டு வருவாய் 2,65,86,085 ஆகவும் தினசரி இந்த ரயில் நிலையம் வழியாக சராசரியாக 535 பயணிகள் பயணம் செய்தி தினசரி வருவாயாக 72,839 கிடைக்கின்றது. இந்த ரயில் நிலையம் வழியாக தற்போது நாகர்கோவிலிருந்து புறப்படும் திருவனந்தபுரம், கொச்சுவேலி, கொல்லம் மெமு ரயில் பயணிகள் ரயில்கள் இங்கு நின்று செல்கிறது. இந்த ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி – பிலாஸ்பூர், திருநெல்வேலி – ஜாம்நகர் ரயில்கள் மற்றும் தினசரி ரயிலாக திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில் நின்று செல்கிறது.
இந்த டவுண் ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதி கிடையாது. சாதாரண முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு மட்டுமே பெறமுடியும். அதற்காக தனியார் முகவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அவர் வந்து பயணச்சீட்டு வழங்குவார். ரயில் புறப்படும்போது பச்சைக் கொடி காட்டும் பணியையும் அவரே கவனித்து வருகிறார். ரயில் நிற்காத நேரங்களில் இந்த நிலையம் மூடப்பட்டிருக்கும். நாகர்கோவில் ரயில் நிலையத்தை விட்டால் திருவனந்தபுரம் மார்க்கம் 19 கி.மீ தாண்டி இரணியல் ரயில் நிலையம் உள்ளது. இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே அதிக கி.மீ தூரம் கிராசிங் வசதி இல்லாமல் உள்ளது. இந்த காரணத்தினாலே ரயில்கள் அதிக நேரம் நாகர்கோவில் சந்திப்பு அல்லது இரணியல் ரயில் நிலையத்தில் கிராசிங்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் அதிக இடநெருக்கடி ஏற்படுகின்றன. திருநெல்வேலியிருந்து வரும் ரயில்கள் தோவாளைக்கு அடுத்து உள்ள நாகர்கோவில் அவுட்டர் சிக்னல்க்காக அதிக நேரம் காத்துகிடக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்ற கன்னியாகுமரி – திருவனந்தபுரம் மின்மயமாக்கம் திட்டத்தின் கீழ் உட்படுத்தி செயல்படுத்துவது என்று திட்டம் தீட்டப்பட்டு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு திட்ட ஒப்புதல் பெறபட்டது. ஆனால் மின்மயமாக்கும் பணிகளை செய்யும் மத்திய ரயில்மின்மயமாக்கும் நிறுவனம் நிதிபற்றாகுறை காரணமாக இந்த பணிகளை செய்யாமல் விட்டுவிட்டனர். கன்னியாகுமரி – திருவனந்தபுரம் வழித்தடம் மின்மயமாக்கல் பணிகள் 2012-ம் ஆண்டு நிறைவுபெற்று விட்டன. அடுத்து இந்த ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த ரயில் நிலையத்தை 31-03-2010 பார்வையிட்ட ரயில்வே இணை அமைச்சர் ஈ. அகமது இந்த ரயில் நிலையம் ஐந்து கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள். ஆனாலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஆனால் பல ஆண்டுகளாகவே எந்த ஒரு பணிகளும் செய்யாமல் இழுத்தடித்தனர் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள்.
பின்னர் குமரி மாவட்ட அனைவரின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் நிலையத்தை இரண்டு ரயில் தண்டவாளங்கள் கொண்ட கிராசிங் நிலையமாக மாற்றி விரிவாக்கம் செய்ய தனிதனியாக என இரண்டு பணிகளுக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகளுக்கு தேவையான நிதி மிகவும் குறைவாக ஒதுக்கப்பட்ட காரணத்தால் மிக மந்தமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இந்த பணிகளை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் இணைந்து வந்து இந்த ரயில் நிலையத்தை பார்வையிட்டனர். ஆனாலும் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் பணிகள் மிகவும் காலதமதாக நடந்துவந்தது. இந்த ரயில் நிலையத்திலிருந்து பல பயணிகள் ஏறி இறங்கும் போது விபத்துக்கள் ஏற்பட்டு ஒருசிலர் மரணமடைந்து உள்ளனர்.
பின்னர் பலவருடங்களுக்கு பிறகு ரயில் நிலையத்துக்கு புதிய கட்டிடம் பணிகள் நிறைவுபெற்று திறப்புவிழாவிற்காக காத்துகொண்டுஇருக்கின்றது. இந்த ரயில் நிலையத்தில் புதிய கட்டிடத்தை திறந்து நிலைய அதிகாரி நியமித்து முன்பதிவில்லாத கணிப்பொறி வசதியுடன் கூடிய பயணசீட்டு கவுண்டரை பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது வெகுவிரைவில் திறக்கப்படும் என்று நாகர்கோவில் நகர மக்களால் எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் சிக்னல் வேலைகள் நடைபெறாமல் இருந்து வந்தது. குமரி மாவட்ட பயணிகள் சங்கம் சார்பாக இந்த ரயில் நிலைய புதிய கட்டிடத்தை உடனடியாக திறந்து ரயில்வே நிலையஅதிகாரி கணிப்பொறி பயணசீட்டு ஊழியர் நியமித்து பயணிகள் வசதிக்காக செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்று ஞாயிற்றுகிழமை இந்த ரயில் நிலையம் பயணிகள் வசதிக்காக திறக்கப்பட உள்ளது.