சசிகலா சிறைத்தண்டனை முடிந்து வரும் 7-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என அ.ம.மு.க துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தியாகத்தலைவி சின்னம்மா வருகிற 7.2.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகிறார். தமிழக எல்லையில் இருந்து சென்னை வருகிற வரை வழி நெடுக அவர்களுக்கு அளிக்கப்படுகிற வரவேற்பை, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் இன்றி அமைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா கால வழிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து, தியாகத் தலைவி சின்னம்மாவிற்கும் உங்கள் அன்புச் சகோதரனாகிய எனக்கும் எவ்வித அவப்பெயரும் ஏற்படா வண்ணம் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றிட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா கட்டிக்காத்த இயக்கத்தை மீட்டெடுத்திடவும், அம்மாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திடவும் வரும் தேர்தலில் தீயசக்தியான தி.மு.க-வை தலையெடுக்கவிடாமல் செய்திடவும், அம்மாவின் உண்மை தொண்டர்களாகிய நாம்அனைவரும் ஒற்றுமையோடு இருந்து செயல்படுவோம்” என குறிப்பிட்டுள்ளார் தினகரன்.