கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் போடப்பட்டிருந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளை பயன்படுத்தலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா தமிழக தலைமைச் செயலர் சண்முகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திரையரங்குகளில் ஐம்பது சதவீதம் இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என்றும் தமிழக அரசின் அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை நீர்த்துபோகச் செய்யும். எனவே மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி தேவையான உத்தரவை உடனே பிறப்பிக்க வேண்டுமென அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.