திருப்பதி ஏழுமலையானை வழிபட பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் கிடையாது என திருப்பதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானின் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 24-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 3 ஆம் தேதி வரை அதிகளவில் வருவார்கள் அபபோது பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருகிற 25-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி முதல் முறையாக 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அரசு உயர் அதிகாரிகள் அனைவரையும் 25-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்க திட்டமிட்டுள்ளது நிர்வாகம். அதில் முக்கிய பிரமுகர்கள் நேரடியாக வந்தால் அவர்களுடன் 6 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பக்தர்களுக்காக திருப்பதியில் 5 முக்கிய இடங்களில் 10 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுளளதாகவும் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாகவும் கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்பதிவு செயவோர் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து தரிசன டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் துவாதசியையொட்டி கோவில் உள்ளே சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் வைகுண்ட ஏகாதசி அன்று வருகிற அனைத்து பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி லட்டு பிரசாதம் வழங்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.