தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஞானதேசிகன் இன்று காலமானார். அவருக்கு வயது 71. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஞானதேசிகன், தமிழகத்த்தில் இருந்து இரண்டு முறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி-யாக இருந்திருக்கிறார். ஜி.கே.வாசன் தாமாக-வை தொடங்கியதும் காங்கிரசிலிருந்து விலகி தா.மா.க-வுக்குச் சென்றார். 2014-ம் ஆண்டு முதல் தா.மா.க கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை ஓரளவு தேறியதால் வார்டுக்கு மாற்றப்பட்டார்.
பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று திடீரென அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் இன்று திடீரென மரணமடைந்தார். இது தாமாக தொண்டர்களையும், அவரது ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.